கேப்டன் தொலைக்காட்சியைத் தொடர்ந்து மாலை முரசு தொலைக்காட்சியின் தொழிலாளர் விரோதப்போக்கு!

0
821

வல்லரசுகள் என இதுநாள்வரை உலகை ஆதிக்கம் செலுத்திவந்த நாடுகள் தொடங்கி, வல்லரசாகத் துடிக்கும் இந்தியா போன்ற வளரும் நாடுகள் வரை கொரோனாவின் முன் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. இந்நாடுகள் அனைத்தும் முழுமையான ஊரடங்கை நடைமுறைப்படுத்தியதோடு அனைத்துத்துறை தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய கட்டாய விடுப்பு வழங்கி கொரோனா பரவலைத் தடுக்க முயற்சித்து வருகின்றன. ஆனால், மருத்துவம், ஊடகம், காவல்துறை பணியாளர்களுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இம்மாதிரியான இக்கட்டான சூழலில் மேற்கூறிய பணியாளர்களின் தேவை இன்றியமையாத ஒன்று. அப்படி, தம் உயிரையும் பொருட்படுத்தாமல் ஊடகத்துறையைச் சேர்ந்த செய்தியாளர்கள், துணை ஆசிரியர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஓட்டுநர்கள் எனப் பல்லாயிரம் பேர் இந்நேரத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் உயிர்காக்க பல ஊடக நிறுவனங்கள் பாதுகாப்பு உபகரணங்களை அவர்களுக்கு வழங்கி வருவதோடு, உணவு, போக்குவரத்து வசதி உள்ளிட்டவையையும் செய்து கொடுத்துள்ளன. மேலும், சில நிறுவனங்கள் தாமாக முன்வந்து நோய் தொற்றிலிருந்து தம் பணியாளர்களை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பும் வழங்கியுள்ளன.

ஆனால், எந்த நேரமும், யாருக்கும் கொரோனா பரவக்கூடும் என்ற இந்த கொடிய சூழலிலும், தம் உயிர் பாதுகாப்புக் கருதி பணிக்கு சில நாட்கள் வராத ஊழியர்களிடம் கேப்டன் தொலைக்காட்சி சம்பளப் பிடித்தம் செய்துள்ளது. அறமற்ற இச்செயலைக் கண்டித்து மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் அறிக்கை வெளியிட்டதோடு, சம்பந்தப்பட்ட அந்நிறுவனம் உடனடியாக பிடித்தம் செய்த ஊதியத்தொகையை தம் பணியாளர்களுக்கு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தது. இதனிடையே, செய்தியாளர்களை இன்று சந்தித்த தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ‘மத்திய, மாநில அரசுகளின் உத்தரவை மீறி எந்த ஒரு தனியார் நிறுவனமும், வேலைக்கு வருமாறு பணியாளர்களை நிர்பந்திக்கவோ, வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்யவோ கண்டிப்பாக கூடாது’ எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில்தான், அரசு அறிவித்த ஊரடங்கு நாட்களில் பணிக்கு வராத தம் பணியாளர்கள் சுமார் இருபதுக்கும் மேற்பட்டோரிடமிருந்து சராசரியாக 4,000 ரூபாய் வரை சம்பளப் பிடித்தம் செய்திருக்கிறது மாலை முரசு தொலைக்காட்சி. ஏற்கனவே கேப்டன் தொலைக்காட்சி செய்த சம்பளப் பிடித்தத்தை சுட்டிக்காட்டிய பின்பும், தமிழக அமைச்சரே இது கண்டிக்கத்தக்க செயல் எனக் கூறிய பின்னரும் கூட மாலை முரசு தொலைக்காட்சியின் இந்த மனிதாபிமானமற்ற, அராஜக செயலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாகக் கண்டிக்கிறது. உலகே பயந்து கிடக்கும் சூழலில் பணி செய்யும் ஊடகத் தொழிலாளர்களுக்கு துரோகமிழைக்கும் கேப்டன் மற்றும் மாலை முரசு தொலைக்காட்சிகள் தம் தவறை உணர்ந்து காலதாமதமின்றி உடனடியாக தம் பணியாளர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை திருப்பியளிக்க வேண்டுமென மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறது. மேலும், இனி வரும் அடுத்த இரண்டு மாதங்கள் கொரோனாவின் பரவல் அதிகமாகும் என்ற அச்சம் எழுவதால், பணியாளர்களை மேலும் அச்சுறுத்தாமல் அவர்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுக்கும்படியும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது. இம்மாதிரியான நிகழ்வுகள், இனி வேறு எந்த பத்திரிகை மற்றும் காட்சி ஊடக நிறுவனங்களிலும் நிகழாமல் இருக்க பத்திரிகையாளர் பாதுகாப்பை வலியுறுத்தி அனைத்து பத்திரிகை சங்கங்களும் குரல் கொடுக்கவும், ஒன்றிணையவும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.