குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் விருதுநகர் மாவட்ட செய்தியாளர் கார்த்தி மீது நடத்தப்பட்டுள்ள கொலை வெறித்தாக்குதலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

0
1696

குமுதம் ரிப்போர்ட்டர் அரசியல் புலனாய்வு வாரஇதழின் விருதுநகர் மாவட்ட செய்தியாளராக கார்த்தி பணியாற்றி வருகிறார். துடிப்பான நபரான கார்த்தி புலனாய்வு செய்திகளை சேகரிப்பதில் மிகுந்த ஆர்வமுள்ளவர். அந்தவகையில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்தூர் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மனுக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை இருப்பதாக அறிந்த கார்த்தி, அதுதொடர்பான செய்திகளை கடந்த மூன்று வாரங்களாக குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடர்ச்சியாக எழுதி வந்துள்ளார்.

அரசியல் புலனாய்வு இதழ்களில் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பான புலனாய்வு செய்திகளுடன் அரசியல்கட்சிகளின் நடவடிக்கைகள் தொடர்பான புலனாய்வு செய்திகளும் வெளியாவது வழக்கம். அந்தவகையில் தனக்கு அளிக்கப்பட்ட வேலையின் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்ட அதிமுக தொடர்பான செய்தியை கார்த்தி எழுதியுள்ளார். இந்த செய்தி முதல்முறை வெளியானபோதே அதிமுக தரப்பிலிருந்து கார்த்திக்கு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த மிரட்டலுக்கு அஞ்சாமல் கார்த்தி தொடர்ந்து செய்தியை வெளியிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று (03.03.20) வெளியான குமுதம் ரிப்போர்ட்டர் இதழிலும் அதிமுக உட்கட்சி பிரச்சனை தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. இன்று தனது பணியை முடித்துவிட்டு மாலையில் சிவகாசியில் உள்ள பெல் ஹோட்டலில் கார்த்தி தேனீர் அருந்த சென்றுள்ளார்.  அப்போது அங்கு வந்த சிலர் கார்த்தியை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால், கார்த்தியின் வாயிலும், உடலின் பல்வேறு இடங்களிலும் ரத்தம் வழிந்தோடியுள்ளது. ஒரு கட்டத்தில் கார்த்தி நிலைகுலைந்து கீழே விழுந்ததும், அவரை தாக்கியவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

உடனே அங்கிருந்தவர்கள் கார்த்தியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். வாயில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் பேச முடியாத நிலையில் தற்போது கார்த்தி சிகிச்சைபெற்று வருகிறார்.

நடந்தவற்றை வைத்துப்பார்க்கும்போது தனது பணியை செய்ததற்காக கார்த்தி கடுமையாக தாக்கப்பட்டுள்ளது உறுதியாகிறது. பத்திரிகையாளரை பணிசெய்ய விடாமல் தடுப்பது, அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்து சுதந்திர உரிமையை பறிப்பதேயன்றி வேறில்லை.

அதுவும், கருத்துச் சுதந்திரத்தையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய ஆளும் கட்சி தரப்பு இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், இதை ஒரு சாதாரண குற்ற நிகழ்வாக கருத முடியாது.

ஆகவே, காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கண்டுபிடித்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் சார்பாக வலியுறுத்துகிறோம்.

தாக்குதலுக்குள்ளான பத்திரிகையாளர் கார்த்திக்கு அரசு செலவில் உயர்சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

தாக்கப்பட்ட கார்த்திக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உடனடியாக பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

மேற்கூறிய கோரிக்கைகளை வென்றெடுக்க, அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகளும் ஒருங்கிணைந்து குரல்கொடுக்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.