கார்க்கியும் காதலும் – அருண்மொழி வர்மன்

0
1592

“உலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த நாவல், மர்க்சிம் கார்க்கி எழுதிய தாய்”, இதை சொன்னது கலைஞர் மு.கருணாநிதி. அண்ணா, பாரதிதாசன் என்று பல எழுத்தாளர்கள் அவரை சுற்றியிருந்தபோதும், அவரை அதிகமாய் கவர்ந்தது மர்க்சிம் கார்க்கிதான். புரட்சிகாரர்களை மட்டும் அல்ல, பல பூச்சிக்காரர்களையும் மார்க்ஸ் பக்கம் திருப்பியதில், கார்க்கியின் பங்கு முக்கியமானது. கம்யூனிஸ்டுகள் வாழ்க்கை கடினமானது, அவர்கள் வரட்டுத்தனமாக வாழ்பவர்கள் என்றும், அன்று முதல் இன்று வரை கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக முதலாளித்துவம் கட்டமைத்துள்ள பிம்பத்தை உடைத்தெறிந்து வருவது கார்க்கியின் தாய் நாவல் தான்.

1900களின் தொடக்கத்தில், ரஷ்யாவில் நடைபெற்ற கம்யூனிச புரட்சிக்கான போராட்டம்தான் இந்த நாவலின் கதைக்களம். இந்த காலகட்டத்தில், மாஸ்கோ அருகே உள்ள ஊரில் செயல்பட்டு வந்த, தொழிலாளர் சங்கத்தின் தலைவன் பாவெல். அதுவரை கணவனின் கொடுமைக்கு ஆளாகியிருந்த அவனது தாய், எப்படி புரட்சியில் பங்கெடுக்கிறாள் என்பதே கதை.

இந்த கதையில் முக்கிய பாத்திரம் பாவெலின் நண்பன் ஆந்திரேயுஷ். சமூகத்தை காதலிக்கும் கம்யூனிஸ்ட் வாழ்கையில் காதல் எப்படி இருக்கும்? எல்லா சூழ்நிலையிலும் எப்படி அவர்கள் நடந்து கொள்வார்கள்? இயவற்றையெல்லாம் விளக்கம் கதாபாத்திரம் ஆந்திரேயூஷ். எப்பொழுதும் கடமை உணர்வுடன், கட்டுக்கோப்புடன் இருக்கும் கதாநாயகன் பாவெல், துவண்டு விடும் போதெல்லாம் அவனை ஊக்கப்படுத்துவது இவன் தான். சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் போதும் விசில் அடித்துக் கொண்டிருக்கும் ஆந்திரேயூஷ், அன்புக்காக ஏங்கி கொண்டிருக்கும் பாவெலின் தாயிடம், அன்பை பொழியும்போது, தத்துவத்தையும் சேர்த்து விதைப்பான். ஆந்திரேயுஷ் மூலம் கார்க்கி சொல்லவந்தது ஒன்றைத்தான். அது, “மக்களுக்கான தத்துவத்தை மக்களின் மொழியில் சொல்ல வேண்டும்”.

அதேபோல், ஆந்திரேயூஷ் கதாபாத்திரத்தின் மூலம், காதலையும் அழகாக விளக்கியிருப்பார் கார்க்கி. பாவெல்- நாதாஷா இருவரும் ஒருவரையொருவர் காதலிப்பார்கள், ஆனால் புரட்சிக்காக தங்களை அர்பணித்துக் கொண்ட இருவரும், அவர்களின் காதலை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். இதை அறிந்த பாவெலின் தாய், ஆந்திரேயூஷிடம் கேட்பாள் “ஏன் நீங்கள் இப்படி இருக்கின்றீர்கள்?” என்று. அதற்கு ஆந்திரெயூஷ், “யார் சொன்னது நாங்கள் காதலிப்பதில்லை என்று, சமூகத்தை காதலிக்கும் நாங்கள் சமூகத்தின் அங்கங்களாக வாழ்பவர்களை காதலிக்காமல் இருப்பதில்லை. நாங்களும் காதலிக்கின்றோம், எங்கள் காதல் வெறும் உணர்வு பூர்வமானது அல்ல அது சமூத்தோடு இணைந்தது” என்று பதிலளிப்பான்.

கம்யூனிஸ்ட்டுகள் காதலை எதிர்ப்பதில்லை; மாறாக மிக அழகாக காதலிப்பார்கள் என்பதை நாவலில் அற்புதமாக விளக்கியிருக்கின்றார் கார்க்கி. மனித வாழ்வில் காதல் எப்படி இருக்கும், காதல் என்பது என்ன, என எல்லாவற்றையும் சொல்லும் கார்க்கி அற்புதமான எழுத்தாளர் தான். கதையில் கதாநாயகனுக்கு இணையாக ஒரு கதாபாத்திரத்தை படைத்து அதன்மூலம் கருத்துக்களை சொல்வது கடினம். ஆனால் அதை அழகாக சொல்லியிருப்பார் கார்க்கி. சமூக மாற்றத்திற்கு பயன்படாத கலையும் இலக்கியமும் குப்பைகள் என்று சொல்வார் மாவோ. அந்தவகையில், மனித சமூகத்திற்கான மிக பெரிய பொக்கிஷம் தோழர் மார்க்சிம் கார்க்கியின் தாய் நாவல். என்னைப்போல் பலரையும் சமூகத்தை காதலிக்க வைத்த தோழர் மார்க்சிம் கார்க்கி அவர்களுக்கு செவ்வணக்கங்களை செலுத்துவோம்.