கருத்துக் கணிப்பை வெளியிட்டதற்கு எதிர்வினையாக, புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சி அரசு கேபிளிலிருந்து நீக்கியதை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

0
724

ஊடகங்கள், அரசையோ, பெரு நிறுவனங்களையோ அல்லது தனி நபர்களையோ சார்ந்திராமல், சுதந்திரமாக மக்களை முழுமையாக சென்றடையக்கூடிய ஏற்பாடு இருக்கும் பட்சத்தில் மட்டுமே, அவைகளால் முழு சுதந்திரத்துடன் மக்களுக்கான செய்தியை எந்த வித பாரபட்சமுமின்றி சென்று சேர்க்க முடியும். ஆனால், தற்போதைய சூழ்நிலையில், பெரும்பாலான ஊடகங்களை நடத்துபவர்களே பெரு நிறுவனங்களாகவும், அரசியல் கட்சிகளாகவும் இருக்கின்றனர். அவர்கள் தங்களுடைய நலனுக்கு எதிரான செய்திகளை தங்களுக்கு சொந்தமான ஊடகத்தில் வெளியிடுவதில்லை. ஆகவே, அதில் பணிபுரியும் செய்தியாளர்களே நினைத்தாலும் பல செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க முடிவதில்லை.

இந்நிலையில், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் காட்சி ஊடகங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் கட்டமைப்பான, கேபிள் டிவி நிறுவனம், 2011ஆம் ஆண்டு வரை, சன் குழுமத்தின் அங்கமான சுமங்கலி கேபிள் டிவி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. தமிழகத்தில் காட்சி ஊடகங்களை நடத்துபவர்கள்,சுமங்கலி கேபிள் டிவி நிறுவத்தின் மூலம் மட்டுமே மக்களிடம் தங்களின் தொலைக்காட்சியை சென்று சேர்க்க முடியும். கேபிள் டிவி துறையில் ஏகபோகமாக வளர்ந்திருந்த சுமங்கலி கேபிள் டிவி நிறுவனத்திற்கு அனைத்து ஊடகங்களும் பெரும் தொகையை வழங்கவேண்டியிருந்தது. அத்துடன், சன்குழுமத்தின் அரசியல் மற்றும் பொருளாதார நலனுக்கு எதிராக செய்தியை வெளியிடும் ஊடகங்கள் சுமங்கலி கேபிள் நிறுவனத்தால் மிரட்டப்படுவதும், மிரட்டலுக்கு பணியாத தொலைக்காட்சியை, மக்களிடம் சென்று சேரவிடாமல் தடுப்பதும் நிகழ்ந்ததாக பல ஊடக நிறுவனங்கள் கூறக்கேட்டுள்ளோம்.

இதைத்தொடர்ந்து, சுமங்கலி நிறுவனத்தின் ஏகபோகத்தை ஒழிப்பதற்கு, கேபிள் டிவி நிறுவனத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. இந்நிலையில், 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அரசு கேபிள் டிவி நிறுவனம் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்தது. இதனால், சுமங்கலி கேபிள் டிவி நிறுவனத்தின் ஏகபோகம் தளர்ந்தது. அரசு கேபிளின் வளர்ச்சியால், ஊடகங்களுக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடி தளர்வடையும் என்று எதிர்பார்த்த நிலையில், உண்மையில் அவ்வாறு நிகழவில்லை. அதிமுக அரசுக்கு எதிராக, அதாவது அரசின் செயல்பாடுகளை விமர்சித்து செய்தி வெளியிடும் ஊடகங்கள், அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் மிரட்டப்பட்டுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக, புதிய தலைமுறை செய்தித்தொலைக்காட்சி 06.04.17 அன்று ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டது. இந்த கருத்துக்கணிப்பு, தமிழகத்தில் தற்போது ஆட்சியிலிருக்கும் அதிமுக (அம்மா) அணியினருக்கு எதிராக இருந்ததால், அந்த தொலைக்காட்சி தமிழகத்தின் பல மாவட்டங்களில் அரசு கேபிளிலிருந்த நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அரசியல் சாசனத்தில், குடிமக்கள் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள இந்த உரிமையை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. ஆனால், அந்த அரசே இந்த உரிமையை பறிப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

ஆகவே, நீக்கப்பட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சியை உடனடியாக அரசு கேபிளில் மீண்டும் வழங்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.

இப்படிப்படி சூழலில், மக்களிடம் உண்மையை சென்று சேர்ப்பது, அதன் மூலம் அவர்களை சரியாக சிந்திக்க வைப்பது ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில், கருத்து சுதந்திரத்தை காப்பாற்றுவதற்கு பத்திரிகையாளர்களும், ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.

எதிர்காலத்தில், எந்த தனிநபரையோ, பெரு நிறுவனங்களையோ, அரசியல் கட்சிகளையோ சார்ந்திராமல், ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படும் வகையில், பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கூட்டுறவு ஊடக நிறுவனங்களையும், கேபிள் டிவி நிறுவனங்களையும் தொடங்குவதற்கான முன் முயற்சியை தற்போதிருந்தே தொடங்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.

இந்த மிகப்பெரும் பணியை செய்து முடிப்பதற்கு, அனைத்து பத்திரிகையாளர்களும், சங்கமாக ஒருங்கிணைய வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.