கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (18.05.2014), தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் வீட்டில், செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

0
330

மே 20 2014

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (18.05.2014), தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் வீட்டில், செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தாக்குதல் நடத்தப்பட்ட அன்றை தினம் சென்னை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனைத்து பத்திரிகையாளர்களும் கூடி ஒரு ஆலோசனையில் ஈடுபட்டனர். அந்த கூட்டத்தில், கடந்த காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்ற போது அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்தும் பேசப்பட்டது. பெரும்பாலும், இதுபோன்ற சம்பவங்களில் போலீசார் புகார் பெறுவதுடன், அதன் மீது நடவடிக்கை எடுப்பது கிடையாது என்றும் பல பத்திரிகையாளர்கள் தங்கள் கருத்தை முன்வைத்தனர். இந்த கருத்து, காவல்துறை ஆணையரை சந்தித்தபோதும் அவரிடம் புகாராக முன்வைக்கப்பட்டது. ஆகவே, இதுபோன்ற சம்பவங்கள் இனி எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க, இந்த சம்பவத்தில் சம்பந்தபட்ட நபர்கள் மீது காவல்துறை எடுக்கும் நடவடிக்கையை கண்காணிப்பதற்காக, பத்திரிகையாளர்களை கொண்ட ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் என்ற யோசனை “மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின்” சார்பாக முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையை பலர் ஏற்றுக்கொண்டபோதும், உடனடியாக இதை நடைமுறைப்படுத்துவதற்கான சூழல் அமையவில்லை.
இந்நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக இன்று 11 நபர்களை, காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இருந்தபோதும், பத்திரிகையாளர்களின் எதிர்கால பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கமிட்டி அமைப்பதற்கான தேவை இருப்பதாகவே மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கருதுகின்றது. இந்த கமிட்டி, பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அமைப்பாக இல்லாத பத்திரிகைத்துறை பணியாளர்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக இருக்கும் பட்சத்திலேயே அது முழுமைபெறும். ஆகவே, நம்முடைய எதிர்கால நலனை கருத்தில் கொண்டு உடனடியாக, பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கமிட்டியை உருவாக்க முன்வரவேண்டும் என அனைத்து பத்திரிகையாளர்கள் அமைப்பு மற்றும் பத்திரிகைத்துறை பணியாளர்களை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கின்றது.