ஒரு காதல் கவிதை – அருண்மொழிவர்மன்

3
1553

காதலன்: அன்பே!
என் பாரசீக ரோஜாவே…..
இங்கே வா…..

காதலி: இதோ….

காதலன்: உன் இதழ்
சுவைப்பதன் காரணம்
என்னவோ???

காதலி: உப்பு கொண்ட அனைத்தும்
மனிதனுக்கு சுவைக்கும்

காதலன்: உன் இதழ்
தேன் கனியன்றோ???

காதலி: உன் வியர்வை
என் இதழில்
அதுவே காரணம்…..

காதலன்: தலைதூக்கினால்
நம் மாளிகையில்
எத்தனை நட்ச்சதிரங்கள் பார்….

காதலி: நம் கூரையின்
அத்தனை ஓட்டைகளையும்
அது சொல்கிறது.

காதலன்: உன் கையால் குடித்தால்
கூழும், விருந்துதான்.

காதலி: என்ன செய்ய
சுரண்டபட்ட உன்
உழைப்பின் மிச்சம்
இதுதான்.

காதலன்: உனக்கு
கனிவாய் பேச தெரியாதா???

காதலி: எனக்கு
கனவாய் பேச தெரியாது.

காதலன்: இருப்பதை கொண்டு திருப்தி கொள்

காதலி: இழப்பதை எண்ணி சினம் கொள்.

காதலன்: உன்னோடு
நான் சொர்கத்தை நோக்கி
செல்லவிரும்புகின்றேன்.

காதலி: உண்மையான காதலர்கள்,
போராட்ட களத்தை நோக்கியே செல்கின்றனர்.

காதலன்: நானும் போராட்டத்தில் தான் இருக்கின்றேன்….

காதலி: மூலம் தெரியாத போராட்டம் தற்கொலை…

காதலன்: அப்படியா?? சரி…
எங்கு தொடங்க….
எங்கு முடிக்க???

காதலி : மார்க்ஸ் முதல் உன் வரை தொடரு…..

காதலன்: நன்றி தோழர்…..