ஐம்பது ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்தை வழங்க மறுக்கும் வேந்தர் தொலைக்காட்சி நிர்வாகத்தின் சட்டவிரோதப்போக்கை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது. அரசியல் சாசனத்தின் மீது சத்தியம் செய்து பதவி ஏற்ற பாரிவேந்தர், சட்டத்தை மீறுவது நியாயமா?

0
167

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவற்காக மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் ஊடகங்கள் செயல்படுவதற்கு அரசு அனுமதியளித்தது. இருந்தபோதும், பணியாளர்களின் பாதுகாப்பை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பல ஊடக நிறுவனங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து செயல்பட முடிவு செய்தன. அதன்படி பலர் வீட்டிலிருந்தே செயல்பட உத்தரவிடப்பட்டது. பலருக்கு சுழற்சி முறையில் விடுப்பு அளிக்கப்பட்டது.
அந்தவகையில், மார்ச் 25 ஆம் தேதி, வேந்தர் தொலைக்காட்சியில் பணியாற்றும் சுமார் 50 பேருக்கு அந்த நிறுவனம் விடுப்பு அளித்துள்ளது. தாங்கள் அழைக்கும்போது வேலைக்கு வரலாம் என்று அவர்களிடம் நிர்வாகம் கூறியுள்ளது. அடுத்த 6 நாட்களில் அவர்களுக்கு மார்ச் மாத சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, அவர்கள் விடுப்பில் இருந்த 6 நாட்களுக்கும் சேர்த்தே அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. விடுப்பில் சென்றவர்களோ நிர்வாகம் மீண்டும் அழைக்கும் என்று காத்திருந்துள்ளனர். ஆனால், நிர்வாகத் தரப்பில் அவர்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. இதனிடையே ஊரடங்கை மேலும் 19 நாட்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன் பிறகும் நிர்வாகம் விடுப்பில் சென்றவர்களை அழைக்கவில்லை.
இந்நிலையில், வழக்கமாக மாதத்தின் இறுதி வேலை நாளில் சம்பளம் வழங்கும் வேந்தர் டிவி நிர்வாகம் ஏப்ரல் மாதச் சம்பளத்தை விடுப்பில் சென்றவர்களுக்கு டெபாசிட் செய்யாததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே நிர்வாகத்தை தொடர்புகொண்டு அவர்கள் பேசியபோது, நிர்வாகத்தின் நிதி நிலைமை சரியில்லை என்றும், ஏப்ரல் மாத சம்பளம் வழங்கப்படாது என்றும் கொஞ்சமும் மனசாட்சியில்லாமல் கூறியுள்ளனர். அத்துடன், விடுப்பில் இருந்தவர்களுக்கு தலா 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
ஊரடங்கு காலத்தில் பல நிறுவனங்கள் இதுபோன்று தங்கள் பணியாளர்களுக்கு விடுப்பு அளித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கான சம்பளத்தை வழங்கியுள்ளன. ஏனென்றால் பணியாளர்கள் இந்த விடுப்பை கேட்கவில்லை, மாறாக நிர்வாகமே நிர்பந்தித்து அவர்களை விடுப்பில் அனுப்பியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இதை பார்க்க வேண்டும். அப்படியிருக்க, வேந்தர் தொலைக்காட்சியின் ஊழியர்கள் சுமார் 50 பேருக்கு சம்பளம் தர மறுத்துள்ளதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.
உண்மையில் வேந்தர் தொலைக்காட்சி நஷ்டத்தில் இயங்குவதாகவே வைத்துக்கொண்டாலும், வேந்தர் தொலைக்காட்சி மட்டுமல்லாமல், எஸ்ஆர்எம் குழுமத்தின் சார்பாக பல்கலைக்கழகம், கல்லூரிகள், பள்ளிகள், புதிய தலைமுறை தொலைக்காட்சி என பல்வேறு நிறுவனங்கள் லாபகரமாக செயல்பட்டு வருகின்றன. ஆகவே, எஸ்ஆர்எம் குழுமத்தின் ஒரு அங்கமான வேந்தர் தொலைக்காட்சி, நிதிநிலை சரியல்லை என்று கூறுவதை யாராலும் ஏற்க முடியாது. தொழில் தகராறு சட்டத்தின்படி ஒரு குழுமத்தில் மற்ற நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும்போது ஒரு நிறுவனத்தில் ஏற்படும் நஷ்டத்தை சுட்டிக்காட்டி பணியாளர்களுக்கு சம்பளம் தர மறுப்பதோ, அவர்களை வேலையை விட்டு நீக்குவதோ சட்டவிரோதமாகும்.
இதேபோல், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், வேந்தர் தொலைக்காட்சியை சேர்ந்த சுமார் 30 பேர் எந்த வித காரணமுமின்றி ஒரே நாளில் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து பணிநீக்கம் செய்யப்பட்ட 14 ஊழியர்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் 06.01.2020 அன்று புகார் அளித்தனர். இந்தப் புகார் மீது சமரச தீர்வு ஏற்படுத்துவதற்கான பேச்சவார்ததை சென்னை குறளகத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சமரச பேச்சுவார்த்தையின் போது, நிர்வாகத்தரப்பு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு வேலை வழங்க முடியாது என்றும், இழப்பீடும் வழங்க முடியாது என்றும் அடாவடியாக நடந்துகொண்டது. நிர்வாகத் தரப்பின் இந்த முடிவை எழுத்துபூர்வமாக வழங்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் கேட்டுக்கொண்டார். ஆனால், அரசு அதிகாரியின் அந்த உத்தரவையும் கூட மதிக்காமல், பதில் மனு தாக்கல் செய்ய காலம் தாழ்த்தியது. இறுதியாக, தொழிலாளர்கள் அனைவரும் வேந்தர் தொலைக்காட்சிக்கு எதிராக தற்போது தொழிலாளர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பிலுள்ள பாரிவேந்தரின் பெயரில் செயல்படும் வேந்தர் தொலைக்காட்சி, தொடர்ந்து இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுவருவது, அரசியல் சாசனத்தின் பெயரில் பதவிப்பிரமாணம் செய்த பாரிவேந்தர் அதை மீறுவதற்கு சமமாகும்.
பணபலம் இருந்தால், அதிகாரத்தை பயன்படுத்தி எப்படிப்பட்ட சட்டவிரோதமான செயலிலும் ஈடுபடலாம் என்ற மமதையில் வேந்தர் டிவி நிர்வாகம் செயல்பட்டு வருவதையே இது காட்டுகிறது. அதன் தொடர்ச்சியாகவே தொழிலாளர் நலச் சட்டதையும் மதிக்காமல், உலகமே கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையிலும், சிறிதும் மனிதாபிமானமின்றி, தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க மறுத்துள்ளது.
ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கையை சட்டப்பூர்வமாக எதிர்கொண்டுள்ள நிலையில், மேலும் சட்டவிரோத நடவடிக்கையை தொடராமல், விடுப்பில் அனுப்பப்பட்ட ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை, வேந்தர் தொலைக்காட்சி நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.
இதுநாள்வரை நம்முடைய உழைப்பால் சேர்த்துவைத்த பெரும் செல்வத்தை மறைத்துவிட்டு, கொரோனாவின் மீது பழியைப்போட்டு, இன்று வேந்தர் தொலைக்காட்சி எடுத்துள்ள இந்த நடவடிக்கையை பிற ஊடகங்களும் பின்பற்றக்கூடும். ஆகவே, பாதிக்கப்பட்ட வேந்தர் டிவி ஊழியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது, எதிர்காலத்தில் நமக்கு அதே ஆபத்து நேராமல் பாதுகாப்பதற்கு சமம் என்பதை உணர்ந்து, அனைத்து பத்திரிகையாளர்களும் வேந்தர் டிவி ஊழியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் அழைப்பு விடுக்கிறது.