நடு நிசி.
ரயில் நிலையம்.
தாமதமாய் வந்த
பெங்களூர் ட்ரெயின்…
தாமதமாவாவது வருமான்னு
தெரியாத சென்னை ‘அதிவிரைவு’…
ஏடிஎம்மை மொய்க்கும்
மாந்தர் போல்
என்னை மொய்க்கும்
கொசுக்கள்…
சுவிஸ்ஸை விட்டுவிட்டு
சுருக்கு பையில்
கருப்புப் பணத்தை
தேடும் நம்
ஆட்சியாளர்களை போல்
அடியிலேயே உறிஞ்சுகின்றன
இரத்தத்தை….
ஒற்றை ஐநூறை
சட்டை பாக்கெட்டில்
வைத்திருக்கும் அப்பனிடம்
ஐந்து ரூபாய்
சாக்லேட்டை வாங்கித்தரச்சொல்லி
அடம்பிடிக்கும் குழந்தையைப்போல்
உதைத்துக்கொண்டிருக்கிறேன் பூமியை
கொசுக்கடி தாங்காமல்…
கடக்கும் ரயிலில்
கல்லறைத் தோட்டம் போல்
ரிசர்வேசன் கோச் இருக்க,
பேங்க் கவுண்டர் போல
நிரம்பி வழிகிறது
அன்ரிசர்வ் கோச்….
ரயிலும் கடந்துவிட
கணக்கில் பணமிருந்தும்
கையில் எடுக்கமுடியாததை
போல வேடிக்கை
பார்க்க கூட ஒன்றுமில்லை…
அந்த காவலரிடமோ
இந்த கடைக்காரரிடமோ
பேச்சு கொடுத்தால்
இரண்டாயிரம் ரூபாய்
நோட்டுக்கு சில்லரை
கேட்டது போல்
முறைக்கிறார்கள்…
தனிமையை போக்க
ஒரு தோழி
இருந்தால் நலமே
என்று மனம் நினைக்க,
தோழியே தான் வேண்டுமா
என்று மனசாட்சி
உருத்துகிறது….
ஐநூறு ஆயிரத்தை
தூக்கிலிட்டு
இரண்டாயிரத்தை
கொண்டுவந்ததை
நினைத்தேன்….
டாலராக,
தங்கமாக,
நிறுவனங்களாக
ஒளிந்து கொண்ட
கறுப்புப் பணம்போல
மனசாட்சியும் ஓடி
ஒளிந்து கொண்டது….