“என்டிடிவி – இந்தி” தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு மத்திய அரசு விதித்துள்ள “24 மணிநேர தடை”, அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறையேயன்றி வேறேதும் இல்லை.

0
582

கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் தேதி, பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப்படைத்தளத்திற்குள் புகுந்த பாகிஸ்தானை சேர்ந்த 6 பேர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலை முறியடிப்பதற்கு பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட எதிர் தாக்குதல் ஜனவரி 5 ஆம் தேதி வரை நீடித்தது. இந்த சண்டையில், விமானப்படைத்தளத்திற்குள் நுழைந்த 6 பேரும், பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேரும் கொல்லப்பட்டனர். இந்திய பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள விமானப்படைத்தளத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது பல்வேறு தளத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், சண்டை நிகழ்ந்த மூன்று நாட்களும் நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்வும் அனைத்து தரப்பினராலும் உற்று நோக்கப்பட்டது. ஆகவே, அனைத்து ஊடகங்களாலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இந்த தாக்குதல் தொடர்பான செய்திகள் ஒளிபரப்பப்பட்டன.

இந்நிலையில், “என்டிடிவி – இந்தி” தொலைக்காட்சி, ஜனவரி 4 ஆம் தேதி, மதியம் 12 மணிக்கு ஒளிப்பிய செய்தித்தொகுப்பில், பதான்கோட்டிலிருந்து அதன் செய்தியாளர் வழங்கிய நேரலையில், விமானப்படைத்தளத்தில் உள்ள ஆயுதங்கள் மற்றும் இதர தளவாடங்கள் குறித்த தகவலை தெரிவித்ததாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இதன்காரணமாக, நவம்பர் 9 ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி அடுத்த 24 மணி நேரத்திற்கு “என்டிடிவி – இந்தி” தொலைக்காட்சியின் ஒளிபரப்பிற்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை தடை விதித்துள்ளது. செய்தி தொலைக்காட்சிக்கு அரசு தடை விதிப்பது இந்தியாவில் இதுவே முதல்முறையாகும்.

இந்த விவகாரம் தொடர்பாக என்டிடிவி தொலைக்காட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களுடைய செய்தியாளர் தெரிவித்த தகவல்கள் அனைத்தும், ஏற்கனவே பல்வேறு ஊடகங்களில் வெளியான தகவல் என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும்பட்சத்தில், தங்கள் மீது ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடிவடிக்கையை எமர்ஜென்சி காலத்தில் பத்திரிகைகள் மீது தொடுக்கப்பட்ட ஒடுக்குமுறைகளுடன் ஒப்பிட்டுள்ள என்டிடிவி, இந்த தடையை சட்டரீதியாக அணுகப்போவதாகவும் தெரிவித்துள்ளது. அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டையும், என்டிடிவி தரப்பில் முன்வைக்கப்படும் இந்த விளக்கத்தையும் சரியாக புரிந்துகொள்வதற்கு, சில கேள்விகளுக்கு விடைகாண வேண்டியது அவசியமாகின்றது.

மூன்று நாட்கள் நடைபெற்ற பதான்கோட் தாக்குதல் நிகழ்வின்போது, பாதுகாப்புத்துறை அல்லது உள்துறையை சேர்ந்த செய்திதொடர்பாளர்கள் எத்தனை முறை செய்தியாளர்களை சந்தித்தனர்? அரசு தரப்பிலிருந்து எத்தனை முறை அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கைகள் வெளியிடப்பட்டன? பாதுகாப்பு துறை மற்றும் உள்துறை அமைச்சர்களோ அல்லது பிரதமரோ இந்த மூன்று நாட்களில் எத்தனை முறை செய்தியாளர்களை சந்தித்தனர்? இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த தருணங்களில் அரசுதரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான தகவல், ஊடகங்களுக்கு உரிய இடைவெளியில் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு (மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக) அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும். ஆனால், அரசு இவற்றை செய்யத்தவறுகின்றது. இந்த நிலையில், எந்த செய்தியை அச்சில் ஏற்ற வேண்டும் அல்லது ஒளிபரப்ப வேண்டும் எதை செய்யக்கூடாது என்ற முடிவை ஊடகங்கள் தன்னிச்சையாக எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றன அல்லது உறுதிபடுத்தப்படாத செய்திகளை வெளியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றன. செய்தி வெளியிடுவதில் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபும், வழிகாட்டுவதற்கான சட்டமும் இருந்தபோதும், பதான்கோட் தாக்குதல் போன்ற அடிக்கடி நடக்காத நிகழ்வுகளின் போது, அரசு தரப்பிலிருந்தும் சரியான தகவல் இல்லாதபோது மரபுகளையும், சட்டங்களையும் மீறி சில தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை செய்தியாளர்களின் தவறாக பார்க்க முடியாது.

மேற்கத்திய நாடுகளில், போர், கலவரம், இயற்கை பேரிடர் போன்ற கடினமான சூழல்களில், எவ்வாறு செய்தி சேகரிப்பது என்பது தொடர்பான முறையான பயிற்சிகள் செய்தியாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. அத்துடன், இதுபோன்ற நிகழ்வுகளின்போது செய்தியாளர்கள், எந்தவித தடையுமில்லாமல் சுதந்திரமாக செய்தி சேகரிப்பதற்கும் அனுமதிக்கப்படுகின்றனர். அதாவது, போர்க்களத்திற்கே நேரடியாக சென்று செய்தி சேகரிக்கப்பதற்கும் அனுமதிக்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட ஜனநாயகப்பூர்வமான சூழலில், தேர்ச்சி பெற்ற செய்தியாளர்கள் களத்திலிருந்து செய்தி வழங்கும்போது தவறு ஏற்படுவதற்கு வாய்ப்பே கிடையாது. அத்துடன், உண்மையை முழுமையாக மக்களுக்கு வழங்க முடிகின்றது. ஆனால், இந்தியாவின் களநிலைமை முற்றிலும் வேறு. பாதுகாப்புபடை வீரர்கள், காவல்துறையினர் மற்றும் கட்சிகளின் தொண்டர்களால் ஏற்படும் பல்வேறு தடைகள் மற்றும் இடையூறுகளை மீறி செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க வேண்டியுள்ளது. அத்துடன், எளிதில் அணுக முடியாத தலைவர்கள், வாய்திறக்க மறுக்கும் அதிகாரிகளின் மத்தியில் உண்மையை வெளிக்கொண்டு வர செய்தியாளர்கள் போராட வேண்டியுள்ளது. அத்துடன், அரசும் அரசியல் கட்சிகளும் தாங்கள் விரும்பும் அல்லது தாங்கள் கூறும் செய்திகளை மட்டுமே ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்ற பிற்போக்கான எண்ணத்தை பல நேரங்களில் வெளிப்படுத்துகின்றனர். அதை மீறும்போது அந்த குறிப்பிட்ட செய்தியாளரோ அல்லது அவர் சார்ந்த ஊடகமோ அவதூறு வழக்கு உட்பட பல்வேறு வழிகளில் மிரட்டப்படுகின்றன. ஆகவே, செய்தி வழங்கும் வெளியை ஜனநாயகப்படுத்தாமல், செய்தியாளர்களையும், ஊடகங்களையும் குற்றம் சுமத்துவது முற்றிலும் உள்நோக்கம் கொண்டது அல்லது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது.

அந்தவகையில், என்டிடிவி தொலைக்காட்சிக்கு எதிராக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை விதித்துள்ள தடையை, கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறையாகவே பார்க்க வேண்டியுள்ளது. அத்துடன், என்டிடிவி வெளியிட்ட செய்திகள் ஏற்கனவே மற்ற ஊடகங்களிலும், பொது வெளியிலும் இருக்கக்கூடிய தகவல்களே என்பதை வைத்து பார்க்கும்போது, குறிப்பிட்ட ஒரு ஊடகத்திற்கு எதிரான உள்நோக்கம் கொண்ட நடவடிக்கையாகவே இதை பார்க்கத் தோன்றுகின்றது.

ஆகவே, “என்டிடிவி – இந்தி” தொலைக்காட்சிக்கு விதிக்கப்பட்டுள்ள 24 மணி நேர ஒளிபரப்பு தடையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கின்றது.

அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கங்களும், பத்திரிகையாளர்களும், கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில், என்டிடிவி தொலைக்காட்சிக்கு ஆதரவாக ஒன்றிணைய வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கின்றது.

இந்த தருணத்தில், செய்தி சேகரிப்பதற்கான ஜனநாயக வெளியை உருவாக்குவதற்கு, அனைத்து பத்திரிகையாளர்களும் அமைப்பாக வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கின்றது.