ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள சன் டிவி நிர்வாகம், மனசாட்சியுடன் சிந்தித்து அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டுமென்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.

0
1270

சன் செய்திகள் தொலைகாட்சியில், சமூக வளைதளங்களில் வெளியிடப்படும் மீம்ஸ்களை தொகுத்து, செய்தியாக வெளியிடும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கிண்டல் செய்யும் வகையில் வெளியிடப்பட்ட ஒரு மீம்ஸை தவறுதலாக செய்தியில் இணைத்ததற்காக அந்த செய்தி தொலைகாட்சியின் தலைமை ஆசிரியர் ராஜா, நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சிவகுமார், யோகா, கலை ஆகியோர் எந்தவித முன்னறிவிப்போ, விளக்கம் கேட்போ இல்லாமல் நீக்கப்பட்டுள்ளனர்.

செய்தி தொலைகாட்சிகள் மட்டுமல்லாமல், தினசரி நாளிதழ்களிலும் கூட, மனித தவறுகளால் சில செய்திகளில் தவறுகள் நிகழ்வது இயல்பு. மிகப்பெரிய செய்தித் தாள்களிலும், ஊடகங்களிலும் தினந்தோறும் இதுபோன்ற தவறுகளை நம்மால் சுட்டிக்காட்ட முடியும். இப்படிப்பட்ட தவறுகள் வேண்டுமென்றே செய்யப்படுவதில்லை. அதுபோலவே, சன் செய்திகள் தொலைகாட்சியில், தவறுதலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான மீம்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒருவேளை அந்த தவறு வேண்டுமென்றே நடந்திருப்பதாக நிர்வாகம் கருதியிருந்தால், அதுகுறித்து விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அதற்கு பொறுப்பான நபர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை தெரிவிக்க இடமளித்திருக்க வேண்டும். ஆனால், அதுபோன்ற எந்த வாய்ப்பும் வழங்காமல், நான்கு பேரும் நீக்கப்பட்டிருப்பது இயற்கை நீதிக்கு எதிரானது மட்டுமல்ல, தொழில் தகராறு சட்டத்தின் படி சட்ட விரோதமாகும்.

தற்போது கொரோனா வைரஸ் பரவலால் உலகமே திணறிக்கொண்டிருக்கும் நேரத்தில், பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த சமயத்தில், மனிதாபிமான அடிப்படையில், பெரும் நிறுவனங்கள் அரசுக்கு உதவி செய்து வருகின்றன. நிறுவனங்கள் சம்பள குறைப்போ, ஆட்குறைப்போ செய்யக் கூடாது என்று அரசு தரப்பிலும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊழியர்களை பணி நீக்கம் செய்தது சட்டத்திற்கு புறம்பானது என்பது ஒருபுறம் இருந்தாலும், உலகம் ஒரு மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்துள்ள இந்த நிலையில், மாத சம்பளத்தை நம்பி வாழும் ஊழியர்கள் மீது, சன் டிவி நிர்வாகம் இப்படி ஒரு நடவடிக்கை எடுத்திருப்பது இயற்கை தர்மப்படி மிகப்பெரிய தவறாகும்.

ஆகவே, சன் தொலைகாட்சி நிர்வாகம், பணிநீக்கம் செய்த ஊழியர்களை உடனடியாக மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.

– மு.அசீப், இணை செயலாளர்
www.cmpc.in