“உங்கள் வீட்டு நாய் குட்டி நலமா?” என்ற கேள்வியைத்தான் பத்திரிகையாளர்கள் கேட்பார்கள் என்று அன்புமணி நினைத்தாரா? பத்திரிகையாளர்களை மிரட்டி,கருத்து சுதந்திரத்தை நசுக்க நினைக்கும் பாமக நிர்வாகிகளின் நடவடிக்கையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

0
884

பாட்டாளி மக்கள் கட்சின் அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில் நேற்று (25.02.19) தி.நகரில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற அக்கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பில் பாமகவின் தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உட்பட பாமக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

சந்திப்பு தொடங்கியதும், அன்புமணி ராமதாசிடம், திராவிட கட்சிகளுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு அதிமுகவுடன், பாமக ஏன் கூட்டணி வைத்தது என்ற கேள்வி பத்திரிகையாளர்களால் கேட்கப்பட்டது. அதிமுக ஒரு ஊழல்கட்சி என்றி கூறியிதுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டை வைத்த பாமக இப்போது அவர்களுடன் கூட்டணி அமைத்ததன் காரணம் என்ன என்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டன.

பத்திரிகையாளர்களால் முன்வைக்கப்பட்ட இந்தகேள்விகள், தமிழகத்தில் தற்போது அனைத்து தரப்பு மக்களாலும் பரவலாக முன்வைக்கப்பட்டு வரும் கேள்விகள். அந்த கேள்விகளைத்தான் பத்திரிகையாளர்கள் அன்புமணியிடம் முன்வைத்தனர். இந்த அடிப்படையைக் கூட புரிந்துகொள்ளாத அன்புமணி இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தவித்ததுடன், தன்னுடைய இயலாமையை மறைக்க, கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை அவமானப்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசிவந்தார். கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையில் அவர்களின் பெயரைக் கூறி, “இனி நீங்கள் கேள்வி கேட்டால் நான் பதிலளிக்க மாட்டேன்” என்றும் கூறினார். நியாயமான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய அன்புமணி, கேள்வி கேட்ட சில பத்திரிகையாளர்களை பார்த்து “நீங்கள் எந்த பத்திரிகை” என்றும் அவர்களை மிரட்டும் வகையில் கேட்டார்.

ஒட்டுமொத்தத்தில், பத்திரிகையாளர் சந்திப்பு முழுவதும் அன்புமணி மழுப்பலாக பதிலளித்ததும், பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையில் நடந்து கொண்டதும் விமர்சனத்திற்குள்ளானது. இதைத்தொடர்ந்து, அன்புமணியிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளரை, அதாவது தனது பணியை செய்த பத்திரிகையாளரை குறிவைத்து பாமக ஆதரவாளர்கள் ட்விட்டரில் அவதூறு கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அதன் உச்சபட்சமாக, இந்த பதிவுகள் அனைத்தையும் தொகுத்து, மொட்டை கடிதம் போன்ற ஒரு அறிக்கையை தயாரித்து, அதை பாமகவின் முக்கிய நிர்வாகிகளே பரப்பி வருகின்றனர்.

இதேபோல், பசுமை தாயகத்தின் பொதுச் செயலாளர் அருள், கேள்வி கேட்க பத்திரிகையாளர்கள் திமுவிடம் பணம் பெற்றதாக எந்த வித ஆதாரமும் இல்லாத ஒரு குற்றச்சாட்டை தனது முகநூலில் எழுதியுள்ளார். நியாயமான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய அன்புமணிக்கு முட்டுக்கொடுக்கவே இந்த முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார் என்பது தெளிவாகிறது.

கேள்வி கேட்டதற்காக கோபப்படும் பாமகவினருக்கு பத்திரிகையாளர்கள் தரப்பிலிருந்து கேட்கிறோம், இப்படிப்பட்ட கேள்விகள் கூட கேட்கமாட்டார்கள் என்று, எந்த நம்பிக்கையில் நீங்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தீர்கள்? இந்த அடிப்படை புரிதல் கூட உங்களுக்கு இல்லையா? நியாயமான கேள்விகளைக் கூட எதிர்கொள்ள நீங்கள் தயாராக இல்லாவிட்டால், ஏன் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு அழைத்தீர்கள்? தேர்தல் காலத்தில், கூட்டணி பற்றி கேள்வி கேட்காமல் காலையில் என்ன சாப்பிட்டீர்கள்? உங்கள் வீட்டு நாய் குட்டி நலமா? என்று நாங்கள் கேட்போம் என நினைத்தீர்களா? இல்லை அப்படித்தான் நாங்கள் கேட்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் “கார் உள்ளவரையும், கடல் நீர் உள்ளவரையும், பார் உள்ளவரையும், திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை. இதை வேண்டுமானால் பத்திரிகையாளர்களுக்கு பத்திரத்தில் எழுதி தருகிறேன்” என்று பத்திரிகையாளர்களை நக்கலடிக்கும் வகையில் டாக்டர் ராமதாஸ் கூறியதை பாமகவினர் மறந்துவிட்டார்களா? நேற்றை சந்திப்பில் பாமகவிற்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையில் போடப்பட்ட அந்த ஒப்பந்தம் என்ன ஆனது என்று பத்திரிகையாளர்கள் கேட்டார்களா? அல்லது அப்படி கேட்டிருந்தால் உங்கள் பதில் என்னவாக இருந்திருக்கும்?

கருத்து சுதந்திரத்தின் அடிப்படையே, கேள்வி கேட்பதுதான். இது அரசியல் சாசனம் வழங்கி உரிமை. இதை ஒடுக்க நினைத்தவர்கள் அரசியலில் காணாமல் போன கதைகள் உள்ளன. ஊர், பெயர் இல்லாத மொட்டை அறிக்கைகளுக்கும், ஆள் பெயர் இல்லாத வெற்று மிரட்டல்களுக்கும் பயந்து கேள்வி கேட்பதை நிறுத்துபவன் பத்திரிகையாளனாக இருக்க முடியாது. இதை பாமக நிர்வாகிகள் புரிந்துகொண்டு, பத்திரிகையாளர்களை கண்ணியமாக நடத்த பழகிக்கொள்ள வேண்டும் எனவும், பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறு பரப்பி வரும் பாமக நிர்வாகிகளை அக்கட்சியின் தலைமை கண்டிக்க வேண்டும் எனவும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

கருத்து சுதந்திரத்தை ஒடுக்க நினைப்பவர்களுக்கு எதிராக அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகளும் ஒருங்கிணைய வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.