இரு உசுராய் போய்ச்சேர்ந்த ஆசிரியை சகோதரி உஷாவுக்கு சம்ர்ப்பணம் – பாலா

0
496

லட்சம் கோடி அணுக்களில்
பூத்திட்ட ஓர் முட்டை
வித்திட்ட கருவாகி உருவானாள்

முகிழ்த்திட்ட நாளிலேயே முட்டத்
தாய்ப்பால் குடிக்க வந்தவளை
கள்ளிப்பால் குடிக்க வைத்ததென்ன

அடுப்பூதும் அடிமைத்தளை
உடைத்திட்ட விடியலிலும்
உறங்காமல் செய்த செயலென்ன

பெண்ணே தெய்வமென
பொய்பேசி திரிந்தாலும்
பொல்லாப் பெயர்களுண்டு

அவள் வளர்ப்பிலும்
வாழ்விலும் வழக்காடும்
வழமை உண்டு

பிஞ்சுப் பிள்ளையானாலும்,
பேதை, பேரிளம் பெண்ணாயினும்
பொத்தியே பார்க்கவேண்டும்

உடை சுத்தியே மூட வேண்டும்
கலாச்சார கழிவுகளை
கொட்டும் தொட்டியாக்கினீரே

உணர்வென்றும், உயிரென்றும்
உடலென்றும் ஒன்று உண்டென்று
உணர்ந்ததுண்டா எப்போதும்

கற்பென்னும் கடலொன்றை
கட்டிவைத்து காப்பதென்ன
கருமக் கடமையா ?

உயிர் தந்த ஒருத்தியோடு
உறவெங்கும் பெண்ணிருக்க
இன்னொருத்தி மட்டுமென்ன

இளக்காரம் ஆகிவிட்டாள்
பலதார உரிமைபேசும்
பச்சோந்திக் கூட்டத்தில்

சிக்கிய மண்புழுவானவள்
நிலத்தின் மாண்புக்கு
உரமாகி போவதேன் ?

புணரும் போதும்
உணர மாட்டீரோ
இது வன்மமென்று

மறுத்தாலும், மண்டியிட்டாலும்
மரமான உன்நெஞ்சம்
உலுக்காதோ கொஞ்சம்

உணர்ந்தாலும் நீ
மணக்க மாட்டீரே
வேறு சாதியென்று

உணர்ச்சிகள் தீர்த்து
கழிவுகளை கொட்டி
களங்கமும் பூசி

கழுவிலேற்றும் கலாச்சாரம்
கற்றுத் தந்தது யாரோ
எது உங்கள் ஊரோ

மலர்ந்த பூவென பிஞ்சுகள்
நஞ்சால் நசுங்கியதை
கொஞ்சமும் பொறுக்காது

கோபத்தில் பொங்கிய நேரம்
கோலேந்தி வந்த பாட்டிக்கும்
நேர்ந்த கொடுமைகளை

கொட்டித்தீர்த்து அழுதிடத்தான்
கொட்டாத தேள்களின்
தோள்கள் இங்கே உண்டா

அழுதோம், புரண்டோம்
அதிகார கதைகள் கேட்டோம்
அரிதாரம் பூசியாடினோம்

பரிதாபம் பேசித்தீர்த்து
பரிகாசம் காட்டியவனும்
தேவதாசி தேடினான்

பெண்பிள்ளை ஒன்று பெற்று
ஆண்பிள்ளை போலே வளர்த்து
வாழ்ந்திடலாமென்றே

கனவு கண்டால்,
இந்த கழுகளின் கண்ணில்
மண்ணல்ல,

திராவகம் வீசியே
வளர்தெடுக்க முடியும்
நிலைத்து நிற்க முடியும்

நந்தினி, ஹாசினி போலே
இன்னும் எத்தினிபேரோ
இந்த சங்கடப் போரில்

ஒரு பேனா முள் போதும்
உடைத்திடுங்கள் உடனே அதை
அதற்கு முன்னம்,

உணர்த்திடுங்கள் உண்மையாய்
அது எழுதும் தீர்ப்போடு
ஆண்மை அடங்கட்டும்

ஆணவம் பொசுங்கட்டும்
திணவுகள் தீயிரையாகட்டும்
பிணந்திண்ணிகள் சாகட்டும்

இனியொரு பெண்பிள்ளை
இல்லை, எப்பிள்ளையாயினும்
தீண்டாமை வேண்டாம்

பாலியல் கல்வியோ
பாவத்தை கழுவும் கூடமோ
பயமொன்று வர வேண்டும்

சுயநினைவொன்று வர வேண்டும்
சுற்றமும் உற்றவரே என்ற
சுத்தம் நித்தம் பெற வேண்டும்

சுதந்திரம் இன்னொன்று வேண்டும்
அது இந்த சமூகத்தின் கண்களை
அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்

போதும் நந்தினிகள்
போதும் ஹாசினிகள்
போதும் ரித்திகாக்கள்
போதும் உஷாக்கள்…!

– விதுபாலா