அம்மா இங்கே வா வா…. பேட்டி ஒன்றை தா தா…

0
1034

அன்புள்ள அம்மாவிற்கு, இளம் ஊடகவியலாளன் எழுதிக்கொள்வது …

நலம். நலமறிய அவா. அஇஅதிமுக தொண்டர்களால் தாங்கள் அம்மா என்றழைக்கப்பட்டீர்கள். இப்போது பெரும்பாலான தமிழக மக்களும், தேசிய, சர்வதேச ஊடகவியலாளர்களும், அரசியல்வாதிகளும் தங்களை அம்மா என்றே அழைக்கிறார்கள். மகிழ்ச்சி.

தாங்கள் தமிழக முதல்வராக என்னென்ன நலத்திட்டங்களை செய்தீர்கள் என்று தாங்களும் தங்களது தொண்டர்களும் செய்த, செய்துவரும், செய்யப்போகும், பரப்புரைகளின் மூலமே அறிய முடிகிறது. அவ்வளவு நலத்திட்டங்களும் மகிழ்வை தருகின்றன. அதே நேரம் எதிர்கட்சியினர், தங்களின் நலன், தங்கள் கட்சியின் நலன் விரும்பாதவர்கள் தரும், தந்த, தரப்போகும் தகவல்கள் அதற்கு முரணாக இருக்கிறது. அவைகளுக்கு பதிலடியாக பல்வேறு அறிக்கைகளை தாங்கள் வெளியிட்டுள்ளீர்கள். சிறப்பு.

தங்களுக்கு அரசு ரீதியாக, கட்சி ரீதியாக, தொழில் ( விவசாயம் ) ரீதியாக பல்வேறு பணிகள் இருக்கும் என்று எனக்கு மட்டுமல்ல, எதிர்கட்சியினருக்கும் தெரியும். தங்களது வேலைப்பளுவிற்கு நாளொன்றுக்கு 24 மணி நேரமே போதாது என்பதே உண்மை. ஆனாலும் தங்களிடம் மனக்குமுறளோடு இந்த விண்ணப்பத்தை முன்வைக்கிறேன்… முற்றும் அறிந்த தங்களுக்கு ஒரு ஊடகவியலாளன் என்ன கேட்பான் என்பதும் சர்வநிச்சயமாக தெரிந்திருக்கும்…

இருந்தும் அம்மாவிடம் பசிக்கிறது என்று குழந்தை கேட்கமலேயே உணவு கொடுப்பால் என்று தெரிந்தும், மகன் அந்த அம்மாவிடம் உணவு கேட்கும் அந்த சாதாரன நிகழ்வைப்போல் கேட்கிறேன்… அம்மாவிடம் குழந்தை பசி என்று கேட்டதும் நிச்சயம் அதற்கு அம்மா பசியாற்றுவாள் என்பது தங்கள் முன்வைக்க எள்ளளவும் அவசியமில்லை என்றே அறிகிறேன்…

அனைத்தும் அறிந்த தாங்கள், அனைவருக்கும் அருள்பாவிக்கும் தாங்கள், ஊடகவியலாளர்களை மட்டும் ஒதுக்குகிறீர்களோ ? என்ற எண்ணம் சக, மூத்த ஊடகவியலாளர்களின் குமுறல்களில் இருந்து தெரிகிறது… எனக்கு ஒரே ஆச்சர்யம்… என்ன இது சர்வமும் அறிந்தவர், மக்களாலேயே உருவாகி, மக்களுக்காகவே தவ வாழ்வு வாழ்ந்துவருபவர்… அந்த மக்களின் குரலையும் செவியையும் மட்டும் புறம்தள்ளுகிறாரா… சரி ஏன் என தங்களிடமே கேட்டுவடலாமா என்றால் அதற்கும் உங்களை சந்திக்க வேண்டுமே… சரி சாமியைத்தான் பார்க்க முடியவில்லை, பூசாரிகளிடமாவது கேட்கலாமா என்று பார்த்தால். அவர்களே கோவிலுக்கு என்றாவது ஒருமுறைத்தான செல்பவர்களாக இருக்கிறார்கள்… அத்தோடு மௌனிகள் வேரு… என்ன செய்ய…

தங்களை சந்திக்க தங்களது இல்லமான தோட்டத்து கோவிலுக்குள் அல்ல கோவில் இருக்கும் தெருவுக்குள் கூட நுழைய முடியாது. சட்டமன்ற வளாகத்திற்குள்ளும் சந்திக்க முடியாது… மற்றவர்களிடம் மைக்கை தூக்கிக்கொண்டு ஓடுவதை போல் தங்களை நெருங்கவே முடியாது… அந்த அளவிற்கு பாதுகாப்பு மிகுந்த, நெருங்கவே முடியாதவர் தாங்கள்… தங்கள் கடைக்கண் பார்வை பட்டால் மட்டுமே தாங்கள் நினைத்தால் மட்டுமே ஒருவரால் தங்களிடம் ஒரு பத்தடி நெருங்கி குனிந்து மரியாதையே செய்யமுடியும் என்றிருக்கும் போது என்னால், என்னை போன்றவர்களால் எப்படி நெருங்க முடியும். இது தாங்களும் தமிழகமும் அறிந்ததே..

ஊடக மூத்தோர்களிடம் கேட்டபோது, ஆட்சி பொறுப்பேற்றதும் தாங்கள் வாரமொருமுறை செய்தியாளர்களை சந்திப்பதாக வாக்களித்திருந்ததாகவும் ஆனால் நீங்கள் அந்த வாக்கை காப்பாற்றவில்லை என்றும் சொன்னார்கள்… அவ்வளவு ஏன் மத்திய அமைச்சர்களால் கூட தங்களை பார்க்க முடியவில்லை என்று அவர்கள் ஏக்கப்பட்டனர்… ஏதாவது ஒரு காரணம் நிச்சயம் இருக்கும். ஆனால் அதை எப்படி தங்களிடம் கேட்பேன். ஒரு குழந்தை உலகை அறிய எண்ணற்ற கேள்விகளை அதன் அம்மாவிடம் கேட்பது போல, தங்களை பற்றியும், தங்கள் கட்சியை பற்றியும், தங்கள் ஆட்சியை பற்றியும் அறிந்துகொள்ள ஒரு ஊடக குழந்தை விரும்பும் தானே…

இதை ஏன் இப்பொழுது எழுதுகிறேன் என்ற சந்தேகம் பலருக்கும் வரலாம். ஆனால் முற்றும் அறிந்த தாங்கள் இதையும் அறிவீர்கள என்று நான் அறிவேன்… இருந்தாலும் தெய்வங்கள் பக்தனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்தும் அதை பக்தனையே கேட்கவிட்டு கொடுப்பது போல, நான் சொல்லி விடுகிறேன்…

சமீப காலமாக எல்லோரும் ” ஏன் இதே கேள்விய முதல்வர்ட்ட கேப்பியான்னே” கேக்குறாங்க… என்னமோ இவனுங்க எல்லாம் தினமும் உங்களை பார்த்து நாழு கேள்விய கேக்குற மாதிரியும், நாங்கெல்லாம் தினமும் உங்களை பார்த்து குனிஞ்சு ஆசீர்வாதம் வாங்கிட்டு காதுல பூ வெச்சுட்டு வர மாதிரியே பேசுறாங்க…

சரி ஏதோ லூசு பசங்க பேசிட்டு போறாங்கன்னு விட்டா… எதிர்கட்சிதலைவர் ( முன்னாள் ) எப்ப பார்த்தாலும் இதே கேள்விய கேட்டுட்டே இருக்கார்… அதுல அன்னைக்கு ஒரு முறை துப்பிட்டார்னா பாத்துக்கோங்களே… எதிர்கட்சி தலைவர் எங்கள பார்த்து காரித்துப்பியும் உங்கள இன்னும் பார்க்க முடியால… அவரு எதிர்க்கட்சி தலைவர், அவராலேயே உங்கள பார்க்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் உங்கள்கிட்ட மக்களுக்காக அதிக கேள்விகள கேட்ட்ருக்க வேண்டியதே அவருதான். எங்கள ஏன் சந்திக்க மாட்டீங்குறீங்கன்னும் அவருதான் கேட்ருக்கனும். உங்கள பார்த்து நாழு கேள்வி கேக்க துப்பில்லாம எங்கள துப்பிட்டு போய்ட்டார். சரி தொடைச்சி போட்டுட்டு உங்க பேட்டிக்காக காத்திருக்கலாம்னு பார்த்தா. இந்த ஃபேஸ்புக் காத்து கருப்புகளின் இம்சை தாங்க முடியலை… எங்க பார்த்தாலும் ஏன் உங்க அம்மா கிட்ட கேளே பார்க்கலாம் என்கிறார்கள். வார்த்தைகளால் துப்புகிறார்கள்.. சரின்னு அதையும் விட்டா.. உங்களோடு கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூட கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் கேட்கிறார்கள். கூட்டணி பேரங்கள் போது தங்களை எப்படி சந்தித்தோம் அல்லது சந்தித்தோமா என்றெல்லாம் இவர்கள் சிந்திக்கவே மாட்டார்கள் போல… இவ்வளவு ஏன் சமீபத்தில் வடக்கில் இருந்து பிரபல்ய ஊடகவியலாளர்கள், நிறுவனர்கள் சிலர் தமிழகம் வந்திருந்தனர்… எதிர்கட்சிகளை எல்லாம் சந்தித்த அவர்களுக்கே தங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை எனும் போது எங்கள் நிலை.

இருந்தும் திரும்பிய திசையெல்லாம் அதேகேள்வி… எவனுக்காவது பதில் தெரியலைன்னாலோ, இல்ல பதில் சொன்னா மாட்டிக்குவோம்னு தெரிஞ்சாலோ கொஞ்சம்கூட வெட்கப்படாமல், இதே கேள்விய உங்க அம்மாட்ட போய் கேப்பியாங்குறான்.. இந்த துயர் துடைக்க, அவல நிலை நீங்க, தாங்கள் பேட்டி கொடுத்தே ஆக வேண்டும் போல் இருக்கிறது.

ஆகையால் தாங்கள் மனமுருகி, எங்கள் தவறுகள் ஏதேனும் இருப்பின் மன்னித்து, தங்களிடம் கேள்விகேட்கும் அருளை தரவேண்டி கேட்டுக்கொள்கிறேன்…

பின் குறிப்பு :

முற்றும் அறிந்த தங்களுக்கு, நான், நாங்கள் என்ன கேட்போம் என்பதும் சர்வ நிச்சயமாக தெரிந்திருக்கும்… இருந்தாலும் (*) முதல் கேள்வியே. ஏன் இவ்வளவு நாட்கள் செய்தியாளர்களை சந்திக்கவில்லை ? என்பதே என்று மட்டற்ற மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன்.

இப்படிக்கு

தங்கள் பேட்டிக்காக காத்திருக்கும்,

ஒரு இளம் ஊடகவியலாளன்