அம்புகளின் இலக்கு மாத்திரம் இங்கு தவறவில்லை, இந்திய விளையாட்டு வீரர்களின் ஒட்டுமொத்த ஒலிம்பிக்ஸ் பயணமும் தான் – திவ்ய விக்னேஸ்

0
1685

ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவிற்கு தோல்விகள் ஒன்றும் புதிதான அனுபவம் கிடையாது. இந்திய நாட்டின் சார்பில் பங்குபெறும் வீரர்களின் படு தோல்விகளும், அதையொட்டி ஊடகங்கள் எழுப்பும் விவாதங்களும் கால சுழற்சியில் அந்த விவாதங்கள் காணாமல் போவதற்கு சாட்சியங்களாக நாமே நிற்கின்றோம்.
பிள்ளைகளை நல்ல பள்ளிகூடங்களில் படிக்கவைப்பதே விண்ணளக்கும் வித்தையாக உருமாறியுள்ளது. பள்ளி கூடங்களில் அக வளர்ச்சி மற்றும் புற வளர்ச்சி வேண்டி சேர்க்கப்படும் பிள்ளைகளுக்கு சிறந்த உடற்கல்வி, விளையாட்டு போன்ற திறனரிவை வளர்ப்பதற்கு பள்ளிக்கூட பொறுப்பாளர்கள் முன்வருவதில்லை. நீச்சல் குளங்கள்,விளையாட்டு திடல்கள் ,பன்னாட்டு விளையாட்டுகளுக்கு தேவையான கருவிகள் என விளையாட்டு சாதனங்கள் பள்ளி கூடங்களில் இருக்குமாயின், அது வெறும் விளம்பர தேடலுக்கான கட்டமைப்பாகவே அமைந்துள்ளது. மனித வாழ்வில் பொருளாதார வளர்ச்சி தேடி ஓடும் போட்டியில் முன்னுரிமை பெறுவதற்கான துருப்பு சீட்டாகவே பயன்படுகிறது பள்ளிக்கூடங்கள் வழங்கும் கல்வி தகுதி சான்றிதழ்கள். ஆடுகளத்தை தங்கள் வாழ்கை தடமாக மாற்றிக்கொள்ள விளையாட்டு மாணவர்கள் விரும்புவதில்லை அதற்க்கான சூழலையும் பள்ளி மற்றும் பெற்றோர் தருவதில்லை.
பொருளாதார ரீதியில் ஓரளவு வளமாக இருப்பவர்கள் மாத்திரமே தொடர்ந்து தாங்கள் ஈட்டுபட்டுள்ள விளையாட்டு துறையில் முன்னேற முடிகிறது. நம் நாட்டில் நிலவும் பொருளாதார சூழலே நம் நாட்டில் தொழில் முறை விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை வெகு குறைவாக இருப்பதற்கு காரணமாகும். இன்றைய தேதியில் இந்திய நாடு ஒரு வலுவான பொருளாதார சக்தியாகவும் உற்பத்தி திறன் மிகுந்ததாகவும் காணப்படுகிறது , இருப்பினும் கடந்த ஐம்பது ஆண்டுகளில், விளையாட்டு துறை மாத்திரம் எவ்வித வளர்ச்சியும் காணாமல் இருக்கிறது. நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்றுமே வெகுஜன மக்களின் வாழ்வியல் முறையில் ஏற்றம் தருபவையாக இல்லை. இதுவே விளையாட்டு போன்ற, திட்டம் சாராத திறன் அடிப்படை துறைகளில் பின்னடைவை ஏற்ப்படுத்துகின்றது. 55% சதவித இந்தியர்களின் ஒரு நாள் கூலி 30 ருபாய் என்ற நலிவடைந்த பொருளீட்டலில் இருக்கையில், அவர்களின் ஆரோக்கியம் மிகவும் பலவீனமாகவுள்ளது. இதனாலேயே நம் நாட்டின் பெரும்பாலான மக்கள் விளையாட்டை பற்றி சிந்திக்க கிட்டத்தட்ட சாத்தியமற்ற நிலையே நிலவுகிறது.
சீனா போன்ற நாடுகள் விளையாட்டு துறையில் பெரும் பாய்ச்சலோடு செயல்படுவதின் காரணம் அந்த நாட்டு மக்களுக்கு அந்த அரசுகள் செயல்படுத்தும், உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார பாதுகாப்பிற்க்கான குறிப்பிடத்தக்க வளர்ச்சி திட்டங்களே ஆகும். இந்தியாவும் சீனாவும்,1950 களில் வெவ்வேறு காலனிய ஆதிகங்களின் சுரண்டளிலிருந்து மீண்டதிலும், பெரும்பான்மை விவசாய பொருளாதாரம், அதிக மக்கள் தொகை, தொன்மை மரபு என பலதரப்பட்ட தளங்களில் கிட்டத்தட்ட ஒரே பண்புநலன் கொண்ட நாடுகள் ஆகும். 1952 ஆம் ஆண்டில் பின்லாந்தில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஒரு பதக்கம் கூட சீனாவால் பெற முடியவில்லை. அதே போட்டியில் இந்தியா 1 தங்கம், 3 வெண்கலப் பதக்கங்களை வென்றது. அறுபது ஆண்டுகள் கழிந்த நிலையில் கடந்த லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டியிலோ நிலைமை தலைகீழ்……. 88 பதக்கங்கள்….. அதில் 38 தங்கம், 27 வெள்ளி, 23 வெங்கலம் என பதக்க பட்டியலில் சீனாவுக்கு இரண்டாவது இடம். இந்தியா பெற்றது வெறும் 6 பதக்கங்கள் அதில் 4 வெண்கலம் ஒன்று கூட தங்கமில்லை. சீனாவின் இந்த அசாதாரண வளர்ச்சி வெறும் யுக விபத்தால் ஏற்ப்பட்ட மாற்றம் அல்ல. சீனா, நாட்டின் ஒட்டுமொத்த மக்களை, தங்களின் திட்ட மிட்ட மேலாண்மையால் முனேற்ற எடுத்துக்கொண்ட பெரும் முயற்சியே காரணம். அது விளையாட்டு துறையிலும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகள் தங்களின் விளையாட்டு திறன்களை ஓர் மேடையில் நிருபிக்கும் ஒலிம்பிக்ஸ், மானுடத்தின் சங்கமம். தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று வீரர்களுக்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு பதகக்களும், அவர்கள் சார்ந்திருக்கும் நாட்டிற்கு சூட்டப்படும் மகுடம் போன்றே பாவிக்கப்படுகின்றது.
ஒரு போட்டியில் மட்டும் முதல் நிலையை தக்க வைப்பது ஒலிம்பிக்ஸ் போன்ற மாபெரும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு உதவாது. ஒரே பிரிவில், பல்வேறு மைதானங்களில், பல்வேறு போட்டியாளர்களோடு களம் கண்டு தொடர்ந்து முதல் நிலையை தக்கவைப்பது வீரர்களின் ஆட்ட நுணுக்கத்துக்கு முதிர்ச்சியை தரும். இந்தியாவை தவிர பிற நாடுகளிலிருந்து போட்டியிடும் பெரும்பாலான விளையாட்டு வீரர்கள், ஆட்ட நுணுக்கத்தில் முதிர்ந்த தொழில் முறை வீரர்களாக விளங்குவதே அவர்களின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணியாக அமைகிறது. எத்தகைய விளையாட்டு ஜம்பவானாக இருந்தாலும் போட்டியில் பல்வேறு தோல்விகளை தாண்டியே அவர்கள் ஒரு வெற்றி இலக்கை அடைய முடியும். இவ்விடத்தில் தான் தொழில் முறை போட்டியாளர்களுக்கு தேவையான பயற்சியும்,உள்க்கட்டமைப்பும் ,உபகரணங்களும் ஒரு வீரருக்கு இடைவிடாமல் தேவைப்படுகின்றது. உலகெங்கும் ஆண்டு முழுவதும் நடைபெறும் பலநூறு போட்டிகளில் பங்குபெரும் வாய்ப்பு விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து கொடுக்கப்பட வேண்டும். விஞ்ஞான ரீதியில் மேம்பட்ட பயிற்சிகளை வீரர்களுக்கு தொடர்ந்து அளிப்பது, வெற்றி தோல்விகளை நோக்கிய நெருக்கடியும் இழுபறியும் படரும் நேரங்களில் உளவியல் ரீதியில் அவர்கள் எதிர்க்கொள்ள வேண்டிய வழி முறைகள் என சிறந்த பயிற்சிகளை அளிக்கும் பட்சத்தில், அவர்களிடமிருந்து நாம் நிச்சயம் வெற்றியை எதிர்ப்பார்க்கலாம். இத்தகைய சூழலில் தான் ஓர் அரசாங்கத்தின் பங்களிப்பு இன்றியமையாததாக படுகிறது. ஓர் ஒழுங்கான விளையாட்டு கொள்கையும் அதன் வாயிலாக தேவைப்படும் அணைத்து வசதிவாய்ப்பையும், உருவாக்கி தருதல் அவசியம். ஏனெனில், ஒலிம்பிக்கில் ஒரு போட்டியில் வெல்வதற்கு குறைந்தபட்சம் 1000 வீரர்களுக்காவது பயிற்சியளித்தல் வேண்டும். இந்த முயற்சி அரசாங்கம் நிதிஉதவி போன்ற பெரும் பொருளாதார வடிவத்தால் மாத்திரமே சாத்தியமாகும். துரதிர்ஷ்டவசமாக, இது போன்ற எந்த பங்களிப்பையும் அரசாங்கத்திடமிருந்து ஒலிம்பிக்கில் பங்குபெறும் விளையாட்டு வீரர்கள் பெறுவதில்லை. தங்களின் சொந்த முயற்சியாலேயே பயிற்சி பெற்று, முயன்று, உலகஅளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்ப்பதென்பதே மிகபெரிய சாகசமாக விளையாட்டு வீரர்களுக்கு விளங்குகிறது. இதுபோன்ற அறிவியல் வழிப்பட்ட புதிய உத்திகளை களத்தில் இறக்காமல் தோல்விக்கு பிறகான புலம்பலில் தொழில்நுட்ப துணையோடு ஒப்பாரிகள் ஓங்கி ஒலிக்கின்றன. அவர்கள் திரும்பவும் விளையாட்டுக் களத்திற்கு வரத்தேவை இல்லை என்கிற பாணியிலான கொண்டாட்டங்களும், அவர்களை தொடர் பயிற்சிகளிளிருந்து விலக வைத்து புதிதாக பங்கேற்கும் இளையவர்களுக்கு அவர்களின் அனுபவம்கிட்டாமல் செய்துவிடுகின்றனர் .
இன்னோர் பக்கம், ஒலிம்பிக் போட்டிகளில், ஏதாவது ஓரிரு போட்டிகளில், ஏதேனும் ஓர் பதக்கத்தை வெல்லும் ஓரிருவரை, ஒரே நாளில் கதாநாயகர்களாக்கி, அவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும், அரசாங்க வேலை வாய்ப்புகளும், சினிமா நட்சத்திரம் போன்ற சித்தரிப்பும் தந்து, அவர்களின் உழைப்பிற்கு வேறோர் வடிவம் தந்துவிடுகின்றனர்.
மாணவர்களுக்கு , சிறு வயதிலேயே அவர்களிடமிருக்கும் திறனறிந்து அவர்களை ஊக்குவித்து தேவைப்படும் அணைத்து சலுகைகளையும் முறையாக அளிக்கும் பட்சத்தில் அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்ப்பதை விட பல மடங்கு சாதனை சாகப்தங்கள் கிட்டபெறலாம். இதற்க்கு சிறந்த உதாரணம், அமெரிக்க நாட்டை சேர்ந்த மைக்கல் பிப்ல்ஸ் என்ற ஒலிம்பிக்ஸ் நீச்சல் வீரர், பள்ளி நாட்களில் ஆட்டிசம் எனப்படும் மதியிறுக்க நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையாக அடையாளம் காணப்பட்டு, அதன் வாயிலாக பள்ளி கல்வியை இழந்தவர். ஆனால் அவரின் நீச்சல் திறனை அடையலாம் கண்டவுடன் அவருக்கு கொடுக்கப்பட்ட ஊக்கமும், வாய்ப்பும், இன்று ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டிகளில் 23 தங்கபதக்கம் பெற காரணமாய் அமைந்துள்ளது.
ஒலிம்பிக் போன்ற உலக விளையாட்டு போட்டிகளில் நம் நாட்டு விளையாட்டு வீரர்களின் உண்மையான முன்னேற்றத்தை காண, அடிப்படை விதிகளிளிருந்தே மாற்றம் தேவைப்படுகிறது. அடிப்படை கல்வி முறைகளிளிருந்தே மாற்றம் செய்தல், மாணவர்கள் விரும்பும் விளையாட்டு துறைகளில் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதி வாய்ப்பையும் ஏற்ப்படுத்தி தருவது. விளையாட்டு துறையில் மாணவர்களின் எதிர்காலம் நிச்சயமற்ற எதார்த்த சங்கடங்களுக்கு வழிவகை செய்துவிடும் என்ற அச்சத்தினை பெற்றோர்களிடத்தில் போக்குதல் வேண்டும். இவையாவுமே அரசாங்கம் என்ற ஓர் பெரும் பொருளாதார சக்தியால் மாத்திரமே சாத்தியம். அதாவது, மக்களுக்கான அரசு அமைந்தால் மட்டுமே இது சாத்தியம். – திவ்ய விக்னேஸ்