அமைச்சரின் செயலை கண்டிக்கின்றோம்!

0
587

ஜூலை 30 2014

அமைச்சரின் செயலை கண்டிக்கின்றோம்!

ஊக்கத்தொகை உயர்வு கோரி, முதுநிலை மற்றும் பயிற்சி மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பான செய்திகளை கடந்த (28.07.2014) முதல் அனைத்து ஊடகங்களும் வழங்கி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, நேற்றைய தினமும் (29.07.2014) அது தொடர்பான செய்தியை சேகரிக்க, சத்தியம் தொலைக்காட்சியின் செய்தியாளர் ராம்குமார், ஒளிப்பதிவாளர் அன்பு மற்றும் பாலிமர் தொலைக்காட்சியின் செய்தியாளர் கார்த்தி, ஒளிப்பதிவாளர் குணசேகரன் ஆகியோர், சென்னை அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அங்கு, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர் களுடன், தமிழக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.விஜயபாஸ்கர் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்ற தகவலின் அடிப்படையிலேயே, செய்திக்குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.
அப்போது, அங்கு வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர்களை பார்த்து இங்கு ஏன் வந்தீர்கள்? என்று கடுமையாக கேட்டுள்ளார். அதற்கு, தாங்கள் செய்தி சேகரிக்க வந்துள்ளோம் என்று செய்தியாளர்கள் பதில் கூறவே, “உங்களுடைய மனைவியை போய் படம் பிடியுங்கள்… இங்கு ஏன் வந்தீர்கள்….” என்று மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளில் அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர்களை திட்டியுள்ளார். மேலும், அந்த இடத்திலிருந்து செய்தியாளர்கள் உடனடியாக புறப்படாவிட்டால், அவர்கள் சார்ந்த செய்தி தொலைக்காட்சி, அரசு கேபிள் நிறுவனத்தின் மூலம், ஒளிபரப்பப்படாமல் முடக்கப்படும் என்றும், மிக மிக கீழ்த்தரமாக, பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் விதமாக மிரட்டியுள்ளார்.

 

இதைதொடர்ந்து, செய்தியாளர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், சுமார் 50க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் அந்த இடத்தில் குழுமிவிட்டனர். அமைச்சர் விஜயபாஸ்கர் உடனயாக செய்தியாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இறுதியாக, விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்திக்க ஒப்புக்கொண்டு கீழே இறங்கி வந்தார். ஆனால், கேமராவை நிறுத்தினால் மட்டுமே மன்னிப்பு கேட்பேன் என்று கூறிவிட்டு மருத்துவமனைக்குள் சென்றுவிட்டார். ஏற்கனவே ஒரு மணிநேரத்திற்கு மேல் காத்துக்கொண்டிருந்த செய்தியாளர்களுக்கு அமைச்சரின் செயல் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. இதன் பின்பு சிறிது நேரம் கழித்து, செய்தியாளர்களின் கோரிக்கைக்கு சிறிதும் மதிப்புக் கொடுக்காமல், அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய வாகனத்தில் ஏறி அங்கிருந்து கிளம்பிவிட்டார். நியாயம் வேண்டி காத்திருந்த செய்தியாளர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.
நடைபெறும் நிகழ்வு எதுவாக இருந்தாலும், ஆபத்தையும் கூட பொருட்படுத்தாமல், சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று செய்தி சேகரிப்பது, ஒரு செய்தியாளனின் கடமை. அவ்வாறு, தன்னுடைய கடமையை செய்துகொண்டிருந்த செய்தியாளர்களை, கொச்சையான வார்தைகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டியது, கடுமையான கண்டனத்திற்குரியது. மேலும், குறிப்பிட்ட செய்தியை வெளியிட்டால், அந்த தொலைக்காட்சியை அரசு கேபிள் நிறுவனத்தின் மூலம், மக்களை சென்றடையவிடாமல் முடக்கி விடுவேன் என்று கூறியது, அப்பட்டமான, பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் செயலேயன்றி, வேறேதும் இல்லை.

அரசு கேபிள் நிறுவனம் என்பது, தனியாரின் ஏகபோகத்தை நீக்கி, அனைத்து தொலைக்காட்சிகளும் சமவாய்ப்புடன், குறைந்த விலையில், மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தொடங்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், செய்தியாளர்களை மிரட்டும் நோக்கில், அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து, அரசு கேபிள் நிறுவனத்தை, ஆளும் கட்சியின் செல்வாக்கு மிகுந்த நபர்கள், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சந்தேகமடையச் செய்கின்றது.

 

ஆகவே, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் செயலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கின்றது!

விஜயபாஸ்கர் உடனடியாக, அனைத்து பத்திரிகையாளர்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்!

 

அரசு கேபிள் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆராய்வதற்காக, தமிழக அரசு உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

 

அரசு கேபிள் நிறுவனத்தின், பாகுபாடற்ற செயல்பாட்டை உறுதிசெய்ய, ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களை உள்ளடக்கிய ஒரு கண்காணிப்புக் குழுவை அமைக்க தமிழக அரசை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள மையம் வலியுறுத்துகின்றது!