அதிகாரப்போட்டியில் ஊழியர்கள் பலிகடா ஆவதா?

0
550

ஜூலை 20 2015

அதிகாரப்போட்டியில் ஊழியர்கள் பலிகடா ஆவதா?

தமிழகத்தில் தனியார் ஊடகங்களுக்கு முன்னோடியாக திகழ்வது சன் குழுமத்தால் நடத்தப்பட்டு வரும் பொழுதுபோக்கு மற்றும் செய்தி தொலைக்காட்சிகளாகும் ஆகும். சன் குழுமத்திற்கு தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் பொழுது போக்கு மற்றும் செய்தி தொலைகாட்சிகள் உள்ளன. இவை தவிர்த்து இந்த மாநிலங்களில் சன் குழுமம் எஃப் எம் ரேடியோக்களையும் நடத்தி வருகிறது. சன் குழுமத்தால் நடத்தப்படும் இந்த ஊடகங்களில் ஆயிரக்கானக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சன்குழுமத்தின் நிறுவனர்கள் மீதுள்ள வழக்குகளை சுட்டிகாட்டி மத்திய உள்துறை அமைச்சகம் சன் குழுமத்திற்கு தடையில்லா சான்றிதல் வழங்க மறுத்துள்ளது. இதன் காரணமாக சன் குழுமத்தால் நடத்தபடும் ஊடகங்கள் முடக்கப்பட கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அவ்வாறு நடக்கும்பட்சத்தில் சன் குழுமத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் எதிர்காலம் கேள்விகுறியாவதுடன்,

இந்த ஊடகத்தை சார்ந்து இயங்கும் மற்ற தொழில்நிறுவனங்களில் பணியாற்றும் மேலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்க கூடிய சூழல் உருவாகும். சன் குழுமத்தின் நிறுவனர்களை பொருத்த வரை அவர்களால் நடத்தப்படும் ஊடகம் உட்பட பல்வேறு தொழில்களில் அதிகாரத்தை பயன்படுத்தி கடந்த காலங்களில்  போட்டியாளர்களை முடக்குவதற்கு அவர்கள் மேற்கொண்ட வழிமுறைகள் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

சன் குழுமத்தின் நிறுவனர்கள் மேற்கொண்ட இதுபோன்ற நடவடிக்கைகளை காரணம் காட்டி,  தற்போது மத்திய அரசு  சன் குழுமத்தை முடக்குவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கையை சிலர் நியாயப்படுத்த நினைப்பது, அந்த குழுமத்தில் வேலை செய்யும் அப்பாவி ஊழியர்களின் நிலையிலிருந்து  பார்க்கும் பொழுது ஏற்றுகொள்ள முடியாத ஒன்று. முதலாளிகள் மீதுள்ள குற்றச்சாட்டிற்காக தொழிலாளர்களை தண்டிப்பது எந்த வகையிலும் நியாயமாக கருத முடியாது.

இந்நிலையில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரே, தடையில்லா சான்றிதல் வழங்கலாம் என்று பரிந்துரைத்த போதும் மத்திய உள்துறை அமைச்சகம் தர மறுப்பது அரசியல் உள் நோக்கம் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது.  ஆகவே சன் குழுமத்தின் அரசியல் சார்பு நிலைக்கும் மத்தியில் ஆளும் பாஜாக அரசின் அரசியல் சார்பு நிலைக்கும் இடையிலான போட்டியின் வெளிப்பாடேகவே சன் குழுமத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க மறுப்பது அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.

இவையனைத்தையும் வைத்து பார்க்கும் போது அதிகார வர்க்கத்திற்கு இடையில் நடக்கும் மோதலின் காரணமாக ஆயிரக்கணக்கன ஊழியர்களின் எதிர்காலம் கேளிவிகுறியாகியிருப்பது தெளிவாகிறது. கடந்த கால அரசியல் வரலாற்றை பார்க்கும்  போது அதிகாரம் படைத்தவர்கள் இடையில் நடைபெறும் போட்டியில் எப்பொழுதும் ஊழியர்களே பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது தெளிவாகின்றது. தற்போது சன் குழுமத்திற்கு நேர்ந்துள்ள இந்த நெருக்கடி மீண்டும் ஊழியர்களையே பெரிதும் பாதிக்கும். எனவே சன் குழுமத்தை பாதுகாப்பதன் மூலம் ஆயிரக்கனக்கான ஊழியர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க முடியும். அந்த வகையில் அனத்து அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகள்,  தொழிற்ச்சங்கங்கள், பத்திரிகையாளர் அமைப்புகள், சன் குழுமத்திற்கு உடனடியாக தடையில்லா சான்றிதல் வழங்க மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மய்யம் கேட்டுகொள்கின்றது.

சன் குழும நிறுவனர்கள் மீதான வழக்கை, நீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர் கொள்ள வேண்டுமே தவிர இது போன்ற நடவடிக்கைகளின் மூலமாக ஆயிரக்கனக்கான தொழிலாளர்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்க கூடாது என்று வலியுறுத்த வேண்டுகின்றோம். எதிர்காலத்தில் இதுபோன்ற அதிகார போட்டிகளாலும் நிறுவனங்களின் ஏக போக விருப்பங்களாலும் ஊடகங்களில் அரசியல் அதிகார தலையீடு ஏற்படுவதை தடுக்க ஊடகங்களுக்கு அனைத்து வகையான உரிமங்கள் வழங்குவது தொடங்கி, ஊடக தொழிலை கண்கானிப்பதற்கான பணிகளை செய்வதற்கு  அரசியல் தலையீடு இல்லாத அமைப்பை உருவாக்க வலியுறுத்த வேண்டுகின்றோம். இந்த அமைப்பில் ஊடக பணியாளர்கள் சங்கம், பத்திரிகையாளர்கள் சங்கம், ஊடக ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டுமென்று வலியுறுத்த வேண்டுகின்றோம்.

சன் குழும ஊழியர்களுக்காக குரல் கொடுப்போம்  ….

ஊடக சுதந்திரத்தை நிலை நாட்டுவோம்…